Skip to main content

“ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிப்பது எங்கள் கடமை” - மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

stalin on kanyakumari election asking question against palanisamy speech

 

இன்று (20-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, தக்கலையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். இதில், பத்மநாபபுரம் தொகுதியில் திமுக’வின் கூட்டணி வேட்பாளரான மனோதங்கராஜ், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான விஜயதரணி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ராஜேஷ்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான பிரின்ஸ் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜயவசந்த் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “பத்தாண்டுகாலமாக பாழ்பட்டிருக்கும் ஒரு நிலையைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து பல கொடுமைகளை, அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சிதான் அ.தி.மு.க.வின் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சி நடத்துகிற பழனிசாமி, ஏதோ பத்தாண்டுகளாக திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளாக மத்திய ஆட்சியின் கூட்டணியோடு தி.மு.க. பொறுப்பில் இருந்ததே, அப்போது என்ன செய்தது என்று தொடர்ந்து பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

 

stalin on kanyakumari election asking question against palanisamy speech

 

நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வியை அவரைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்களே, என்ன செய்துள்ளீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? மேலும் அவருடைய துறை நெடுஞ்சாலைத் துறை. அந்த துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இதை ஆதாரத்தோடு நம்முடைய திமுக வழக்கறிஞர் - மாநிலங்களவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர் பாரதி கண்டுபிடித்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இப்படி டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு? என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்? உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என்ற விதியே இருக்கிறது. அந்த விதியை மீறி அவர் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்த நேரத்தில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இதை விசாரிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்? 4,000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது.

 

இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்குப் பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்? தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும் முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது நம்முடைய கடமை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் ஜெயலலிதா, ஜெயலலிதா என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் ஜெயலலிதா லட்சியத்தைக் காப்பாற்றி விட்டார்களா? என்று பேசியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.