Advertisment

குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது” என்று அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை,செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பாஜக மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கனவே பத்மவிபூசன் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது.

s

ஏற்கனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல், தமிழ் மொழி பற்றி ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் பா.ஜ.க. அரசின் கீழ் அந்த நிறுவனம் அடியோடு முடக்கப்பட்டு, அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் காரணத்தையும் சிறிது சிறிதாக முறியடித்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு- தமிழ் மொழி பற்றி எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் அந்நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. 2016-17 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, விருதுகள் வழங்கி கவுரவிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ, பா.ஜ.க. அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற நேரத்தில்- அவசர அவசரமாக தமிழ்நாட்டு மக்களை இதன் மூலமாகவும் ஏமாற்றி விட வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் இப்போது “விருது கமிட்டி” ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களை- அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்துகிறது.

ஒரு ஆய்வு அல்ல- பல்வேறு ஆய்வுகளை- கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும், வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றி தேர்வு செய்ய முடியும்? இந்த தேர்வுக்குழுவிற்கு முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைவராக இருந்தாலும், மருதாசல அடிகளார் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் - தமிழ்மொழியை சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்திற்கும், வேதங்களுக்கும் தடையின்றி தாலாட்டுப் பாடி வரும் நாகசாமிக்கு ஏன் அக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது?

தமிழர்களின் பண்பாட்டை வெளிக் கொணர ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகளை இன்னும் மூடி மறைத்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. இப்போது செம்மொழித் தமிழ் மீது உள்ள வெறுப்பை மட்டுமே இந்த நியமனம் எடுத்துக் காட்டுகிறது. அதை, “தேர்தல் கூட்டணி கெட்டுப் போய் விடும்” என்றும், “ஊழல் வழக்குகளில் சிறை செல்ல நேரிடும்” என்றும் அஞ்சி நடுங்கி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் “குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்களின் உணர்வுடன் “விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.’’

kalaignar karunanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe