
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்றும் (06.03.2021) நேர்காணல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலில் கலந்துகொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நிலையில், அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. வேறு யாரும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்காததால், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியானது. அதேபோல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்த உதயநிதி ஸ்டாலினிடமும் நேர்காணல் நடைபெற்றது.