
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. அதேபோல் தேர்தல் ஆணையம் சார்பிலும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தீவிர ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 17- ஆம் தேதி (நேற்று) முதல் விருப்ப மனு அளிக்கலாம். பிப்ரவரி 17- ஆம் தேதி முதல் பிப்ரவரி 24- ஆம் தேதி வரை தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநில மாநாடு வரும் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.