தி.மு.க.விலிருந்து ஓரம் கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அதோடு விளையாட்டுப் போட்டி வைத்தும், கேக் வெட்டியும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவது வழக்கம். அந்த அளவுக்கு அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலுமே கடந்த ஐந்த வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார்கள்.

st

Advertisment

இந்த நிலையில் தான் கடந்த 27ம் தேதி தேனி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும், பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களான சரவணக்குமார், மகாராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தேனி வந்தார் ஸ்டாலின். இப்படி வந்த ஸ்டாலின் தேனியில் உள்ள பிரபல லாட்ஜில் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு எடுத்துக்கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களையும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் களம் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

Advertisment

அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான தலைமை கழக முன்னாள் செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் முன்னாள் நகர செயலாளருமான செல்லப்பாண்டியன், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளரான கம்பம் இளங்கோவன், நெசவாளர் அணியின் முன்னாள் செயலாளர் ஆண்டிப்பட்டி ஏ.கே.குமார், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முல்லை சேகர் உள்பட சில அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாலை, சால்வை அணிவித்து கழகத்தில் ஐக்கியமாகிவிட்டனர்.

t

இதுபற்றி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் பொறுப்பாளர்களிடம் கேட்டபோது... நாங்கள் அண்ணன் அழகிரி ஆதரவாளராக இருந்ததுனால எங்களிடம் இருந்த பொறுப்புகளையும் எடுத்துவிட்டு கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் எடுத்திருந்தனர். இதனால் எங்களால் கழக பணியாற்றாமல் இருக்க முடியவில்லை. அதோடு தலைவராக தளபதி வந்ததிலிருந்தே அனைத்து பகுதிகளிலும் கட்சி வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கும் சரியான பதில் அடி கொடுத்து கழகத்தை வழிநடத்தி வருவதைக் கண்டு நாங்களே பூரித்துப் போய் விட்டனர்.

அதனால் தான் இனிமேல் எதற்கு பெயர் சொல்லும் அளவில் மட்டும் இருப்பவர்களுடன் இருந்தால் எங்களுக்கும், இனி மரியாதை இருக்காது என்று நினைத்துதான் தளபதி முன்னால் திமுகவில் சேர்ந்து விட்டோம். எங்களுடன் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கிளை பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்களும் மீண்டும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்மூலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான அழகிரி ஆதரவாளர்கள் தளபதி பக்கம் வந்துவிட்டோம். இன்னும் ஒரு சில முன்னாள் பொறுப்பாளர்கள் மட்டுமே அழகிரி பக்கம் இருக்கிறார்கள். அவர்களும் கூடிய விரைவில் தலைவர் பக்கம் வருவார்கள் என்று கூறினார்கள். ஆக தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரியின் கூடாரமும் காலியாகிவிட்டது!