Skip to main content

டம்மி முதல்வராக கனவை நினைவாக்கி கொண்டார் ஸ்டாலின்: ஜெயக்குமார் கிண்டல்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018
stalin


டம்மி முதல்வராக கனவை நினைவாக்கி கொண்டார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. பயங்கரவாதம் எந்த விதத்திலும் தமிழகத்தில் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும். அதுவரை யாரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது.

தமிழக அரசு என்ன பேச வேண்டும் என்பது குறித்து யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதற்கான கட்டாயம் இல்லை. எங்களுக்கென ஒரு தனித்தன்மை இருக்கிறது. மாற்றான் பேச்சைக் கேட்டு எடுபிடியாக அதிமுக இருக்காது. திமுக வேண்டுமானால் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு தலையாட்டியிருக்கலாம்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை என்றைக்காவது கூட்டலாம். ஆனால், அவர் தினமும் கூட்டுகிறார். அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக நினைத்து கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அதனால் தான், புதன்கிழமை டம்மி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். முதல்வர் கனவு, கோட்டை போன்ற மாயைகளிலேயே ஸ்டாலின் இருக்கிறார். நிஜத்தில் சாதிக்க முடியாததை கற்பனையிலாவது செய்து ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அந்த இரண்டு பேரையும் 62 பேரின் ஆவி சும்மா விடாது' - அதிமுக ஜெயக்குமார் பேட்டி

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'The spirit of 62 people will not leave those two people alone' - ADMK Jayakumar interviewed

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அதேபோல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், ''இந்த அரசு நினைத்திருந்தால் இந்த கள்ளச்சாராய மரணத்தை தடுத்திருக்கலாம். ஆனால் திமுக அரசு இதில் அக்கறை காட்டவில்லை. எக்கேடு கெட்டுப் போனால் என்ன என நமக்கு வேண்டியது மூன்று தான் கமிஷன்; கலெக்சன்; கரப்ஷன் என இந்த மூன்றும் இருந்தால் போதும் என யார் குடித்தால் என்ன; யார் சத்தால் என்ன; சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வந்தால் என்ன; ஆள் கடத்தல் நடந்தால் என்ன; கட்டப்பஞ்சாயத்து நடந்தால் என்ன என விட்டு விட்டார்கள். அப்படித்தான் இன்று முதல்வருடைய செயல்பாடுகள் இருக்கிறது. அப்படித்தான் அரசாங்கத்தின் செயல்பாடும் இருக்கிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் அங்குச் சென்று பார்த்துவிட்டு இரண்டு மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை எனத் தெரிவித்தார். மெத்தனால் என்பது ஒரு கொடிய விஷம். அதைச் சாப்பிட்டாலே கண் போய்விடும். உடலுறுப்புகள் செயலிழக்கும். அந்தக் குறிப்பிட்ட இரண்டு மருந்துகள் இருந்தால் உயிரிழப்பு கண்டிப்பாகக் குறைந்திருக்கும். அந்த மருந்துகள் மருத்துவமனையில் இல்லை எனச் சுட்டிக்காட்டினால் அதை ஒற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு வியாக்கியானம் செய்து 62 பேர் உயிரிழந்துள்ளனர். 62 பேரின்  ஆவி மருத்துவத்துறை அமைச்சர் மா.சுவையும், ஸ்டாலினையும் விடாது சும்மா விடாது. இரவில் வந்து உங்களால்தான் செத்தோம் எனச் சொல்லி மிரட்டும். அப்படித்தான் ஆகும் நிலைமை. எதிர்க்கட்சி சுட்டிக் காட்டினால் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒத்துக் கொள்ளும் தன்மை திமுகவிற்கு கிடையாது'' என்றார்.

Next Story

“விஜய்யை தவிர மீதமுள்ள நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்?” - ஜெயக்குமார் விமர்சனம் 

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Former Minister Jayakumar condemns tamil actors

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது.

இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு‌ அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.