s

திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு: “மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்துத்தான் நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24.12.2018 அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி, ஜனவரி 3-ஆம் தேதியன்று தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையில், 12,617 ஊராட்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும் - கழக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் ஈரோடு மாவட்டத்திலும் - கழக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 2019 ஜனவரி 3ஆம் தேதியன்று தொடங்கி வைத்திட உள்ளார்கள்.

Advertisment

மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியின் பெயர், கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகள் விவரம், தேதி, நேரம் அனைத்தும் அடங்கிய அறிவிப்பினை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் வெளியிடுவார்கள். அதன்படி அந்தந்த மாவட்டங்களில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

பாசிச பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு - மக்கள் விரோத மாநில அ.தி.மு.க அரசுகளின் அவலத்தையும், நிர்வாக தோல்விகளையும், ஊர் ஊராக - வீதி வீதியாக - வீடு வீடாகச் சொல்லும் பிரச்சாரப் பயணம் என்பதால், அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் “ஊராட்சி சபைக் கூட்டத்திற்கான” தலைமைக் கழக பிரதிநிதிகள் அறிவிக்கப் பட்டுள்ளார்கள். கழகத் தலைவர் அவர்களால், அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகளுக்கு, கழக நிர்வாகிகள் - அனைத்து அணி நிர்வாகிகள் - கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்பிரச்சாரத்தின் போது தலைமைக் கழகத்தின் சார்பில் தயாரித்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும் - மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைத்திட வேண்டும்.

Advertisment

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த “ஊராட்சி சபை கூட்டம்” நடைபெற உள்ள அனைத்து விவரங்களையும், தொடர்ந்து தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.