Stagnant rain water in government hospital; Patients suffer

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு அங்குள்ள கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதன்மை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி மேயர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisment

Stagnant rain water in government hospital; Patients suffer

இந்நிலையில் சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை நெஞ்சக மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்துள்ளன. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் குரோம்பேட்டை மருத்துவமனையில் வளாகத்திலும், அங்குள்ள சாலைகளிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கீழ்த்தளத்தில் இருந்த நோயாளிகள் முதல் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மருத்துவமனைக்குள் உட்செல்லும் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீரை வெளியேற்றுவதிலும் சிரமம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.