
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தனி அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தனி அலுவலர்கள், மற்றும் தொடர்பு அலுவலர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவை தொகை, வருடாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் எந்த உடன்பாடு ஏற்படாததால் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பல்கலைக்கழக பதிவாளர் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அண்ணாமலை நகர் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து விடுதலை செய்தனர்.
இதுகுறித்து தனி அலுவலர் சங்க தலைவர் தனசேகர் கூறுகையில், நீதிமன்றம் 7-வது ஊதியக்குழு பரிந்துரை மற்றும் ஊக்க தொகையை வழங்க வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் பல்கலைக்கழகத்தில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் நீதி மன்றத்திற்கு சென்று உரிமையை பெற உள்ளதாக கூறினார்.