
திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்தபோது புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (21/11/2021) அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த செல்ஃபோன்கள் பற்றிய விவரங்களை செல்ஃபோன் சிக்னல் வழி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தஞ்சை மாவட்டம், கல்லணை அருகேயுள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த சிலரின் எண்களைத் தனிப்படையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
அதன்படி 10 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் இன்று (22/11/2021) அதிகாலை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களின் இருசக்கர வாகனங்களையும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.
இதில், கைதான இளைஞர் மணிகண்டனை காவல்துறையினர் நீண்ட விசாரணைக்கு பின் கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, மணிகண்டனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைந்தனர்.