Skip to main content

எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க நிர்வாகி மீது தாக்குதல்;  பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
SRMU union executive beaten

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் முன்விரோதம் காரணமாக எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய மாற்றுச் சங்கத்தை சேர்ந்த 2 என்ஜின் ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்தல் முன்விரோதத்தில் தகராறு

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருபவர் சுதாகரன்(வயது 40). இவர் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தில் லோகோ பைலட் பிரிவு கோட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ரெயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருகிறது. இறுதிநாளான நேற்று மாலை சுதாகரன் திருச்சி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓடும் தொழிலாளர் அவலுவலகத்தின் முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, தொழிற்சங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த என்ஜின் டிரைவர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோர் அங்கிருந்த எஸ்.ஆர்.எம்.யு. தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த சுதாகரன் அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சுதாகரனை இரும்பு கம்பியால் முதுகில் தாக்கியுள்ளனர்.

பணிக்கு செல்ல மறுப்பு

இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்ஜின் ஓட்டுநர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோரை அதே தொழிற்சங்கத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி என்ற ஊழியர் காரில் அழைத்துச்சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த மற்ற எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த என்ஜின் ஓட்டுநர்கள் ரெயிலை இயக்க பணிக்கு செல்ல மறுத்து, ஓடும் தொழிலாளர் அலுவலகம் முன், மாலை 6 மணி முதல் திரளத் தொடங்கினர். இதனால் திருச்சியில் இருந்தும், திருச்சி வழியாகவும் செல்லும் ரெயில்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

பணியிடை நீக்கம்

இதுபற்றி அறிந்த திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க கோட்ட செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட மாற்றுச் சங்கத்தை சேர்ந்த இருவர் மீதும், அவர்கள் தப்பிக்க வைத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து என்ஜின் டிரைவர்கள் கவுதமன், ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.எம்.யூ திருச்சி கோட்ட செயலாளர் வீரசேகரன் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட என்ஜின் ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பு

அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்படி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பது குறித்தும் அவர் எடுத்துக்கூறினார். இதையடுத்து உடனடியாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனர். இச்சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்