Skip to main content

பெண் யானை ஜெயமால்யதா மீதான தாக்குதல் தொடர்வது ஏன்?- பழைய வீடியோ என ஆண்டாள் கோயில் நிர்வாகம் விளக்கம்!  

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

srivilliputhur temple elephant incident

 

‘யானைகள் புத்திசாலியான விலங்கு. அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்குக் கிடையாது. யானைகள் உள்ளிட்ட விலங்குகள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கோயில் யானைகளை முறையாக நடத்தவேண்டும்.’ 

 

கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறையும் வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, இவ்வாறு அறிவுறுத்தியிருந்தனர்.  

 

தற்போது, கோயில் யானை ஒன்று பாகனால் தாக்கப்படும் காட்சி வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், அதுகுறித்து விசாரித்தோம். “துன்புறுத்தப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யதா..”என்றனர். 


என்ன நடந்தது? 

கடந்த ஆண்டும் இதே ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் வைத்து யானைப் பாகனால் தாக்கப்படும் வீடியோ வலைத்தளங்களில் பரவியது. அதனால், பாகன் ராஜா சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். தற்போதும் ஜெயமால்யதா பாகனால் தாக்கப்பட்டு பிளிறும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

இதுகுறித்த நமது கேள்விக்கு விளக்கமளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் ”இது பழைய வீடியோ. இப்ப நடந்த மாதிரி ஏனோ பொய்யான தகவலைப் பரப்புறாங்க. 2021 ஜூன்-ல அந்தப் பாகனை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. வீடியோவுல இருக்கிற பாகன் இப்ப வேலையிலேயே இல்லை. கோயில் கணக்காளர் சுப்பையா, காவலராகப் பணியாற்றும் கர்ணனைக் காலால் எட்டி உதைத்து வைரலானதும்கூட பழைய வீடியோதான். ஆண்டாள் கோவிலை மையப்படுத்தி, பழைய சம்பவங்களைப் புதிதாக நடப்பதுபோல் ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.”என்று வருத்தப்பட்டார்.

 

‘பழசு- புதுசு’என்ற ஆண்டாள் கோவில் தரப்பின் விளக்கம் ஒருபுறமும், விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் மறுபுறமும் இருந்தாலும், கோயில் யானை பராமரிப்பில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்பதே விலங்கின ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.