Sri Lanka court order for Each of the Tamil fishermen was paid Rs. 50 thousand fine

Advertisment

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இதன்படி மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகையும், எட்டு மீனவர்களையும் கைது செய்து மன்னார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 8 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்து இன்று (05.09.2024) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மீனவர்கள் 8 பேருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை உடனே செலுத்த வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் முடிந்து நேற்று முன்தினம் (03.09.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி இலங்கை ரூபாயில் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 42 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த அபராதத்தைக் கட்ட தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 மீனவர்களுக்குச் செப்டம்பர் 10ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று (04.09.2024) கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.