மலேசியாவில் மே 3, 4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உலக அளவில் 8 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக 21 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் தமிழகம் சார்பாக பங்கேற்ற நான்கு பெண்களில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான முருகானந்தம் - கீதா தம்பதியின் மகள் இலக்கியா என்ற 13 வயது சிறுமியும் ஒருவராவார்.

Advertisment

Village girl Achievement

கோடம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்த்துவ பள்ளியில் கல்வி பயின்று வந்த இவர், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வந்தார். இந் நிலையில் தனியார் நன்கொடையாளர்களின் உதவியால் இவர் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்றார்.

பல கட்டமாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவும் கனடாவும் மோதியது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த இலக்கியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisment

இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற சிறுமியின் தந்தை முருகானந்தம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் இலக்கியாவின் குடும்பத்தாரும் பிலிமிசை கிராம மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த இலக்கியாவுக்கு பிலிமிசை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

.

தங்க மங்கை சிறுமி இலக்கியாவுக்கு மலர் தூவி மாலை, சால்வை அணிவித்து அன்பளிப்பு வழங்கி ஆனந்த கொண்டாட்டம் நடத்தினர் கிராம மக்கள். நகர்புறங்களில் தேசிய போட்டிகளில் வெல்பவர்களுக்கே பெரிய அளவில் பாராட்டு கூட்டங்கள் வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும் நிலையில் தங்கம் வென்று நாடு திரும்பியுள்ள ஏழைச் சிறுமியான இலக்கியா தனியார் பேருந்தில் கூட்ட நெரிசலில் வந்து தனது சொந்த மன்னில் இறங்கியது நமது நாட்டுக்கே தலை குனிவு என்று கிராம மக்கள் ஆதங்கப்பட்டனர். இலக்கியா வெளிநாடு சென்று போட்டியில் பங்கேற்க மாநில அமைச்சர்களிடம் உதவி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.