சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவின் கீழ் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜாராமன் (வயது 54). இவர் பணி நிமித்தமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் இவர் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியில் கடந்த 18ஆம் தேதி (18.07.2025) இரவு கலந்து கொண்டார். அதன்படி ராஜாராமன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது இந்த விளையாட்டு இது தொடர்பாக அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காவல் உதவி ஆய்வாளரை அவரது நண்பர்கள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து அவரை உடனடியாக மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சை பலனின்றி இன்று (26.07.2025) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை எழும்பூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான எஸ்ஐ ராஜாராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.