'மறுபிறவி குறித்து அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு'-மீண்டும் ஒரு சர்ச்சை

'Spiritual lecture on reincarnation in government school'-controversy again

சென்னையில் அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஒரேநேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளம்பியுள்ளது. மறுபிறவி குறித்து பேசுவது; ஆன்மீகம் குறித்து பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, புகார் பள்ளிக்கல்வித்துறையினுடைய உயரதிகாரிகளுக்கு சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.

அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்? சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா? அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா? என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கான விளக்கங்களை தமிழக அரசு கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையைஏற்படுத்தி இருக்கிறது இந்த ஆன்மீக சொற்பொழிவு சம்பவம்.

அதேநேரம் கல்விக்கு சம்பந்தம்இல்லாத; உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Devotees TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe