Skip to main content

“ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது சந்தேகங்களை எழுப்புகிறது” - அமைச்சர் உதயநிதி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

The speed of the trains has been reduced which raises various doubts says Minister Udayanidhi

 

வைகை, பொதிகை மற்றும் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட கால அட்டவணை நாளை (01.10.2023) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 

ரயில்களின் கால அட்டவணை மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12636) காலை 7.10 மணிக்குப் பதிலாக 6.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதே சமயம் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12635) வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

 

செங்கோட்டை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்குப் பதிலாக 09.45 மணிக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்குப் பதிலாக 04.30 மணிக்கு இயக்கப்படும். மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்குப் பதிலாக 09.20 மணிக்கு இயக்கப்படும்.

 

மதுரை - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்குப் பதிலாக 07.00 மணிக்கு இயக்கப்படும். மதுரை - விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்குப் பதிலாக 03.35 மணிக்கு இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை - நெல்லை இடையே கடந்த 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தைக் குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனைப் பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்