ADVERTISEMENT

நெடுஞ்சாலையில் வேகத்தடை; 8 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவை அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..! 

05:20 PM Sep 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொடர் விபத்துகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வீராணம் கிராமத்தையொட்டிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலித்துத் தகுந்த முடிவை அறிவிக்க நெடுஞ்சாலைத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வீராணம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்கள் கிராமமான கீழ்வீராணத்தின் அருகாமையில் காவேரிப்பாக்கம் முதல் சோளிங்கர் செல்வதற்கான மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளதாகவும், செங்குத்தான வளைவுகள் உள்ளதாலும், நெடுஞ்சாலை என்பதாலும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதாகவும், ஏராளமான மணல், செங்கல் லாரிகளும், தொழிற்சாலை வாகனங்களும் தொடர்ந்து செல்லும் இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஆரம்பப் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளும், தண்ணீர் எடுத்து வரப் பெண்களும் சாலையைக் கடக்க வேண்டியுள்ளதாகவும், அவ்வழியே நடக்கும் பாதசாரிகளும், பொதுமக்களும் இத்தகைய வாகனங்களின் அதிவேக போக்கால் விபத்துக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றம் தலையிட்டு வேகத்தடை அமைக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஏன் அப்பகுதியில் வேகத்தடை வேண்டும் என்பதற்கான உரியக் காரணங்களை மனுதாரர் தொகுத்து நான்கு வாரங்களுக்குள் நெடுஞ்சாலைத் துறையின் அரக்கோணம் கோட்ட உதவிப் பொறியாளரிடம் மனுவாக அளிக்குமாறும், அதனை 8 வாரங்களுக்குள் பரிசீலித்துத் தகுந்த பதிலைச் சம்மந்தப்பட்ட அதிகாரி மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT