special woman at home for 10 years now visit in book festival pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் - வாசுகி தம்பதியினர். இவர்களுக்கு சுகுணா (33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுகந்திக்குத்திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சுகுணா பெற்றோரின் பராமரிப்பில் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

Advertisment

வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தாலும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள சுகுணா, சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்ததால் ஏராளமான புத்தகங்களை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான கவிதைகளும் எழுதி வருகிறார். அவரது கவிதைகளுக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளார். இப்படியான ஒருவர் வெளியில் தெரியாமலேயே இருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா பன்னீர்செல்வம், புதுக்கோட்டையில் நடக்கும் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவிற்கு ஒரு நாளாவது வரவேண்டும் என்றும்அங்கு தனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி வர வேண்டும் என்றும்அதற்கான வசதியும் வாய்ப்புகளும் இல்லையே என்ற ஆதங்கமான ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

சுகுணாவின் பதிவைப் பார்த்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர். சுகுணாவின வருகையைப் பார்த்த மாணவ, மாணவிகளும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த பலரும் அவருக்கு விருப்பமான ஏராளமான புத்தகங்களைப் பரிசளித்தனர். சில நிமிடங்களில் தனக்குப் பிடித்த புத்தகங்களை இத்தனை பேர் பரிசளித்துள்ளனரே என்று நெகிழ்ந்து போனார்.

பின்னர் இதுகுறித்துப் பேசிய சுகுணா, “10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னைப் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களைப் பலரும் வாங்கிக் கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது. தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும்” என்றார்.

வீட்டிற்குள்ளேயே பல வருடங்களாக முடங்கிக் கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் புத்தகவாசிப்பு ஆர்வம் அவரை அழைத்து வந்துவிட்டது. புத்தகங்கள் வாசிப்பதையே நேசிப்பாக கொண்டுள்ள சுகுணா உயர்ந்து நிற்கிறார் என்றுபுத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பலரும்தெரிவித்தனர்.