/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/local-train-art_4.jpg)
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், போகி பண்டிகையுடன் தொடங்கி (13.01.2025) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை முன்னிட்டு சென்னை திரும்புவோருக்கான சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி தாம்பரம் காட்டாங்குளத்தூர் இடையே வரும் திங்களன்று (20.01.2025) அதிகாலையில் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 04.00, 04.30, 05.00, 05.45 மற்றும் 06.20 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 05.05, 05.40 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து காட்டங்குளத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதே போன்று நாளை (19.01.2025) பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்திருந்தது. அதோடு, 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நாளை பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)