special sub inspector asked for free groundnuts at a pea shop

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பட்டாணிக் கடை வைத்திருப்பவர் ராஜன் பிரேம்குமார். இவர் அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இவரது கடைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராதா, அங்கு வேலை பார்த்த பணியாளரிடம் வறுத்த நிலக்கடலை கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கடைக்குள் இருந்தபடியே நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன். வேறு ஸ்டேஷனிலிருந்தா வந்து கேட்கிறேன். கொஞ்சம் கொடுப்பா என கெஞ்சலாக கேட்கிறார். அதற்கு, கடையில் இருந்த சிறுவன்.. நீங்க கேட்டீங்க ஆனா காசு தரலயே சார்.. எனச் சொல்கிறார். ஆமா, கொஞ்சமாதான கேட்டேன்.. அதுக்கென்ன காசு.. தம்பி இவ்ளோ மோசமா இருந்தா வாழ முடியாது..நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு வந்திருக்கேன்.. யாரையும் ஏமாத்தி மேல வரல.. எனக் கூறிக்கொண்டே அவர் கடையை விட்டுச் செல்கிறார். அப்போது, அவர் கடலையை வாங்கிவிட்டுத்தான் செல்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பக்கம் போலீஸ்காரர் ராதா போனதும், இந்தப் பக்கம் இருக்கும் நபர் ஒருவர்,, வீடியோ எடுத்தாச்சு எனச் சொல்ல, கடை முதலாளி, வீடியோ எடுத்துட்டியா எனக்கேட்க, அந்த வீடியோ அத்துடன் முடிகிறது.

இதுகுறித்து, பட்டாணி கடை உரிமையாளரும் மாவட்ட வணிகர் சங்கத் தலைவருமான ராஜன் பிரேம்குமார் வீடியோ ஆதாரத்துடன், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்எஸ்ஐ ராதாவை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் என்.காமினி அதிரடி உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து சக போலீஸார் கூறும்போது, "SSI ராதா கொஞ்சம் வெகுளியானவர். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று கணக்கு போட்டு பேசத் தெரியாது. அவர் செய்தது தவறாக இருப்பினும்,அவர் மீது புகார் அளித்தபின்னர், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறை அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் காவல்துறை மீது கலங்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். அதனால், காமினி மேடம் எடுத்த முடிவு சரியானதே என்கின்றனர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காவல்துறையினர்.