Special buses will be operated from all areas for front field workers

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா சிறப்பு பிரிவில் 48 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், கரோனா வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் நேற்று (10.05.2021) ஆய்வு செய்தார். அப்போது அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள் அறை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

அவரிடம், ‘கரோனா வார்டில் பணிபுரிய கூடுதலாக மருத்துவ பணியிடங்கள் நிரப்ப வேண்டும்,நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்,விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், வடலூர், தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மருத்துவமனை பணிக்கு வருவோர் நலன் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்’ என அரசு தலைமை மருத்துவர் எழில் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணேசன், “விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். முன் களப்பணியாளர்கள் நலன் கருதி, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.இதேபோல் திட்டக்குடி அரசு கல்லூரியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 48 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம்மையத்தையும்அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

Advertisment

இந்த ஆய்வுகளின்போது விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்,மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக் மற்றும் அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.