Advertisment

அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்.பி.பி - திருமாவளவன் இரங்கல்!

SPB passes away vck leader thirumavalavan condolence

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "இயல்மொழிக்கும் இசைமொழிக்கும் உயிர்ப்பூட்டும் உன்னத ஆளுமை கொண்ட திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

Advertisment

கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் எப்படியும் மீண்டெழுவார் என நம்பிக்கையோடு காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இன்று காலமாகிவிட்டார். கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீளவியலாமல், இன்று பலியான பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இசைக்கு ஈர்ப்பு உண்டு. சொல்லுக்குப் பொருள் உண்டு. எனினும், சொல்லையும் இசையையும் கோர்த்துக் குரலால் இழைத்தும் குழைத்தும் உயிர்ப்பூட்டி, சுவைகூட்டி இயக்கும் ஆற்றல், ஒரு பாடகரின் தனித்திறம் ஆகும். அத்தகைய தனித்திறன் மிக்கவர்களுள் சிறப்புக்குரியவர் எஸ்.பி.பி அவர்கள்.

SPB passes away vck leader thirumavalavan condolence

பன்மொழித் திறன் உள்ளவர். எண்ணிலா விருதுகளை வென்றவர். சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாள வரம்புகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரின் நெஞ்சம் கவர்ந்தவர். இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவருக்காக வழிபாடுகளை மேற்கொள்ளும் அளவுக்கு அவர் அனைவரின் நன்மதிப்பை வென்றவர். அத்தகைய கவர்ச்சிகரமான ஒரு பேராளுமையை இன்று யாம் இழந்திருக்கிறோம் என்பது பெரும் கவலையளிக்கிறது.

Ad

அவரது உணர்வும், குரலும், மொழியும் காற்றில் கலந்து கரைந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவர் எப்போதும் எங்கும் நிறைந்திருப்பார். நம்மோடு உறைந்திருப்பார்.

அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அனைத்துலக அளவில் அனைத்துத் தரப்புக்கும் நேர்ந்த பேரிழப்பு. அவரை இழந்து வாடும் யாவருக்கும் வி.சி.க சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."எனத் தெரிவித்துள்ளார்.

passes away spb vck thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe