SP praises nurse

Advertisment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சாலையில் முதலுதவி செய்த செவிலியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வனஜா, மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். நேற்று (03.12.2021) தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு காரில் சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி 6ஆம் நம்பர் வாய்க்கால் அருகே வரும்போது எதிரே, ஒரு இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதி கீழே சாய்ந்தார்.

தலையில் பலத்த காயம். கண் முன்னே ரத்தம் கொட்டிய நிலையில் இளைஞன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறிக்கொண்டு காரிலிருந்து செவிலியர் வனஜா இறங்கினார். ‘எல்லாரும் ஓரமா போங்க’ என்று சொல்லிக்கொண்டே தார்ச்சாலையில் கிடந்த அந்த இளைஞரின் கைகளைப் பிடித்துப் பார்க்கிறார், நெஞ்சில் கை வைத்துப்பார்த்தார்.அதில் இதயத் துடிப்பு நின்றுவிட்டிருப்பது தெரியவந்தது. உடனே சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சையை அவருக்கு அளித்தார். தனது இரு கைகளாலும் இளைஞனின் நெஞ்சில் வைத்து பலமுறை அழுத்தம்கொடுத்தார்.

சில நிமிடங்களாக நின்றிருந்த இளைஞனின் இதயத் துடிப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதைப் பார்த்து முகம் மலர்ந்த வனஜா, “இனி ஆபத்தில்லை, ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. உடனே மருத்துவமனை கொண்டு போகணும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே 108 ஆம்புலன்ஸ் வந்துவிட, அதில் ஏற்றிவிட்ட பிறகு கருணையோடு நின்ற இதயத்திற்கு உயிர்கொடுத்த செவிலியர் வனஜா தனது காரில் ஏறி வீட்டிற்குச்சென்றார்.செவிலியரின் இந்த செயல் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றது.

SP praises nurse

இந்தநிலையில்செவிலியரின் உயிர்காக்கும் செயலை திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் பாராட்டினார். தொடர்ந்து மாலையில் திருவாரூர் எஸ்.பி விஜயகுமார் செவிலியரை தனது அலுவலகம் அழைத்து அவரை பாராட்டியதோடு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். சமயத்தில் உயிர் காத்த செவிலியரின் தற்காலிக பணியை நிரந்தப் பணியாக்க வேண்டும் என்ற கோரிக்கை மன்னார்குடி பகுதியில் பலமாக கேட்கிறது.