sp balaji slapped policeman issue

உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி, பணியிலிருந்த காவலர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்கு, காவல்துறை ஆணையர் முன்னிலையில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால், அவர் மீதான வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

Advertisment

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி பாலாஜி, கடந்த இரு நாள்களுக்கு முன்பு, சேலத்திலிருந்து கார் மூலமாக கோவைக்குச் சென்று கொண்டிருந்தார். சேலத்தை அடுத்த காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வதைக் கண்டுள்ளார். அதையடுத்து, அந்த நபரை காரில் விரட்டிச் சென்றார்.

Advertisment

அரிசி கடத்திச் சென்ற நபர், மண் சாலையில் இறங்கி குறுக்குப் பாதையில் சென்று தப்பினார். அதே நேரம், அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த கொண்டலாம்பட்டி ரோந்து வாகன எஸ்.ஐ அந்தோணி, காவலர் சிவகுமார் ஆகியோரிடம் ரேஷன் அரிசி கடத்திச் செல்லும் நபரைப் பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர்கள் துரத்திப் பிடிக்காமல் தயக்கத்துடன் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.பி பாலாஜி, ரோந்து வாகன ஓட்டுநரும், காவலருமான சிவகுமாரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் சிறிது நேரம் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி, அங்கிருந்து கோவைக்கு கிளம்பிச் சென்று விட்டார்.

சேலம் மாநகர காவல்துறைக்கு சம்பந்தமே இல்லாத காவல்துறை எஸ்.பி ஒருவர், கீழ் நிலையில் உள்ள காவலரை கைநீட்டி அடித்த விவகாரம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட காவலர், சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். ஆணையர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் லாவண்யா, விசாரணை நடத்தினார்.

Advertisment

இந்நிலையில், காவலர் சிவகுமார் தன்னை அடித்த எஸ்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார். இதற்கிடையே, உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்குப் பயந்துதான் அவர் இவ்வாறு எழுதிக் கொடுத்ததாக தகவல் பரவியதால், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்.பி பாலாஜி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நேரில் வந்து, ஆணையர் நஜ்மல் ஹோடா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து ஆணையர் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இதனால், காவலர் சிவகுமாரை கன்னத்தில் அறைந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.