/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai_11.jpg)
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. நாளை ஆஜராகவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது போலீஸார் பல பொய் வழக்குகளைப் பதிந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டவர்கள் எத்தனை பேர். போராட்டம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)