Skip to main content

தென்னக ரயில்வே சார்பில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

southern railway announced summer special trains time table 

 

கோடைக்கால சிறப்பு ரயில்கள் தென்னக இரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

அதன்படி கொச்சுவேலியில் (திருவனந்தபுரம்) (06083) இருந்து பெங்களூர் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் வரும் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.05 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும். கொல்லம், காயம் குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவாளா, செங்கனசேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு , கோயம்புத்தூர் ஜங்ஷன், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக பெங்களூர் பேட், கிருஷ்ணாராஜாபுரத்திற்கு 27 ஆம் தேதி காலை 10:55 மணிக்கு மணிக்கு சென்றடைகிறது. இதில் மூன்று ஏசி டயர் கோச்சுகள், 16 ஸ்லீப்பர் கோச்சுகள், லக்கேஜ் கோச்சுகள் உள்ளன. இதேபோல் பெங்களூரில் இருந்து (06084) கொச்சுவேலி வரும் மாதாந்திர சிறப்பு ரயில் வரும் 26 ஆம் தேதி (புதன் கிழமை) 12. 45 மணிக்கு கிளம்பி  28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  கொச்சுவேலிக்கு சென்றடைகிறது.

 

இதைப்போல் வாராந்திர சிறப்பு ரயிலாக தாம்பரம் முதல் மங்களூர் வரை இயக்கப்படுகிறது. வண்டி எண் (06041) தாம்பரத்தில் இருந்து வரும் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்படும். சென்னை எக்மோர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஓட்ட பாலம், சோரனூர், குட்டிபுரம், திருர், பராக், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூர், பையனூர், கன்காங்கத் வழியாக கசராகார்ட் சென்றடைகிறது.

 

இதே போல் (O6O42) மங்களூரில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு வாராந்திர ரெயில் வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில் 28 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டு ஏசி டயர் கோச்சுகள், 3 ஏசி டயர் கோச்சுகள், 12 ஸ்லீப்பர் கோச்சுகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இரண்டு மற்றும் லக்கேஜ் பெட்டிகள் உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.