Advertisment

மகனின் கல்லூரிக் கனவு; பறிபோன 4.5 லட்சம்

Son's college dream; Four and a half lakh lost

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மேல் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. பழனியின் மகன் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். இந்நிலையில் பழனியின் மகன் வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப்பட்டுள்ளார். நுழைவுத் தேர்வு எழுதியும் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisment

இதனைத்தொடர்ந்து தனது மகனை அவர் ஆசைப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர்க்க பழனி தனது நண்பர் சரவணனிடம் ஆலோசனை கேட்டுள்ளார். சரவணன் வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் நினைத்தால் வாங்கித்தருவார் எனச்சொல்லி அவரை சந்திக்கக் கூறியுள்ளார். தமிழ்செல்வனை சந்தித்த பழனி தனது மகனுக்குப் பல்கலைக்கழகத்தில் 'சீட்' வாங்கித் தருவதற்காக 18.07.2021 அன்றைய தேதியில் ரூபாய் 4.5 லட்சம் பணத்தை தமிழ்செல்வனிடம் கொடுத்துள்ளார்.

பழனியிடம் பணத்தை வாங்கிய தமிழ்செல்வன் பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி கொடுக்காமல் தொடர்ந்து காரணங்களைச் சொல்லி ஒரு வருடமாகக் காலத்தைக் கடத்தி வந்துள்ளார். இதனால், மகனின் மேற்படிப்பு தாமதமாகியதால் பழனி வேறொரு கல்லூரியில்சேர்த்துவிட்டுள்ளார்.

கல்லூரியில் சீட் கூட வேண்டாம் நான் கொடுத்த பணத்தைத்திருப்பிக் கொடுங்கள் என தமிழ்செல்வனிடம் கேட்டபோது, அவர் இரண்டு வங்கிக் காசோலைகளைத்தந்துள்ளார். கடந்த மாதம் 25-ம் தேதி அந்த காசோலைகளைத்தனது வங்கிக் கணக்கில் செலுத்தியபோது, அந்தக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்ப வந்துள்ளது.

Advertisment

இது பற்றி தமிழ்செல்வனிடம் பழனி கேட்டதற்கு, “பணம் இல்ல அதுக்கு என்ன செய்யச் சொல்ற, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ” என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். தமிழ்செல்வனின் தந்தை பெயர் திருநாவுக்கரசு. இவர் குடியாத்தம் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார். எனவே தன் தந்தையின் பெயரைச் சொல்லி பழனியை தமிழ்செல்வன் மிரட்டியுள்ளார்.

சீட் வாங்கித்தருவதாகப் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் பணம் இல்லை என்றும் மிரட்டியதால், என்ன செய்வதென்று தெரியாமல் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரில் தனியார் பல்கலையில் சீட் வாங்கித் தருவதாக எங்களிடம் கூறி 4.5 லட்ச ரூபாய் பணத்தைப்பெற்றவர், அதைத்திருப்பித்தராமல் ஏமாற்றுகிறார் என்றும் அப்பணத்தைத்தமிழ்ச்செல்வனிடமிருந்து மீட்டுக் கொடுக்கும்படியும் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் இந்தப் புகாரை வேலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். தற்போது காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe