Skip to main content

பதவியேற்பில் பாடல்! அனைத்து தரப்பு எதிர்ப்பையும் வாங்கிய அதிமுக கவுன்சிலர்! 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 

அதில், மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டுகளிலும், 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

 

இந்நிலையில், இன்று வென்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சிகளின் கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் செய்தனர்.

 

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமி‌ஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் வென்ற கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்றார்கள்

 

அப்படி உறுதிமொழி ஏற்றபோது, சென்னை 193வது வார்டு அதிமுக கவுன்சிலர், ‘பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. துணிவு வர வேண்டும் தோழா..’ என்ற பாடல் பாடினார். இதற்கு மற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.