தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 12 ஆயிரத்து 819 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப். 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Advertisment

அதில், மொத்தம் உள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று 3,843 நகராட்சி வார்டுகளில் 18 வார்டுகளிலும், 7,621 பேரூராட்சி வார்டுகளில் 196 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று வென்ற கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சிகளின் கமிஷனர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் செய்தனர்.

Advertisment

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமி‌ஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் வென்ற கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்றார்கள்

அப்படி உறுதிமொழி ஏற்றபோது, சென்னை 193வது வார்டு அதிமுக கவுன்சிலர், ‘பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. துணிவு வர வேண்டும் தோழா..’ என்ற பாடல் பாடினார். இதற்கு மற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.