ADVERTISEMENT

கரோனா மையத்தில், பயத்தை உடைத்த பாசம்...

03:07 PM Aug 21, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்தும், அதே சமயத்தில் கரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றாமல் இருப்பதற்காக சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்கள் உறவினர்களாகவே இருந்தாலும் தூரமாக நின்று பார்த்து கண்கலங்கும் நிலைதான் நிலவுகிறது. அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களாக, தாய் தந்தையராக, கணவன் - மனைவியாக, பிள்ளைகளாக இருந்தால்கூட அச்சப்பட்டு தள்ளி நிற்கும் நிலைதான் உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாயை பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளும் மகனின் பாச உணர்வு சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த தொழுதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(80), ரங்கநாயகி(75), இவர்கள் மகன் செந்தில் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி ரங்கநாயகி காய்ச்சல் காரணமாக தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் ரங்கநாயகிக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ரங்கநாயகி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனோ சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக கடந்த 14-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அதேசமயம் தன்னுடைய வேலைகளை தன்னால் செய்ய முடியாத தாயாருடன் தங்கி செந்திலும் தனது தாய்க்கு தேவையான உதவிகளை ஓடி ஆடி செய்து வருகிறார்.

கரோனா ஏற்படுத்திய உறவுகளுக்கு இடையேயான இடைவெளியை கடந்து, தாயின் நிலை கண்டு உடனிருந்து உதவி செய்யும் செந்திலின் பாசத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

வயதானாலே பெற்றோர்களை ஆதரவற்றோர் இல்லங்களிலும், தள்ளியும் வைக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது தெரிந்தும் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளும் செந்திலின் பாசப் பிணைப்பை எல்லோரும் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT