Son passes away near trichy police arrested his father

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம்(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமிர்தம்(40). இவர்களது மகன் பெரியசாமி(19), திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான முத்துச்செல்வம் தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவி அமிர்தத்திடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது பெரியசாமி தட்டிக் கேட்டுள்ளார். இதேபோல் கடந்த 17ம் தேதி இரவு 10 மணியளவில் முத்துச்செல்வம், மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisment

Son passes away near trichy police arrested his father

அப்போது, 'தினமும் குடித்துவிட்டு வந்து, அம்மாவிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டு தந்தை முத்துச்செல்வத்தை, மகன் பெரியசாமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துச்செல்வம், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெரியசாமியின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் குத்திய முத்துச்செல்வம் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து முத்துச்செல்வத்தை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த தந்தை முத்துச்செல்வத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.