
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் ரசாக் பேட்டையைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சிவக்குமார். இவருக்கு கௌரி என்ற மனைவியும், 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் தினமும் சம்பாதிக்கும் பணத்தில் குடித்துக் கொண்டு, குடும்பம் நடத்த பணம் தராததால் கணவன் - மனைவி இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துவந்த நிலையில், இரண்டு வாரத்திற்கு முன்பு இரு குடும்பத்தினரும் சிவக்குமார் - கௌரி தம்பதியினரை சமரசம் செய்து ஒன்றாக குடும்பம் நடத்தவைத்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சிவக்குமார், அவரது தாய் ராஜேஸ்வரி, மனைவி கௌரி ஆகியோரை சரமாரியாக தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்துபோன அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். குடிபோதையில் வீட்டின் வெளியே திண்ணையில் சிவக்குமார் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் அவரது தாய் ராஜேஸ்வரி, வீட்டின் அருகிலிருந்த கல்லை எடுத்து சிவக்குமார் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார். இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கொலை செய்த தடயத்தை மறைப்பதற்காக கல்லின் மீது சாணத்தை ஊற்றி இரத்தக் கறையை மறைத்துள்ளார்.

காலையில் ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியில் வந்து தன் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக கூச்சலிட்டு, அப்பகுதி மக்கள் உதவியுடன் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் சிம்பாவை வரவழைத்தனர். அது அவரது வீட்டையே சுற்றி வந்தது.
அதனால் போலீசார் அவரது தாய் ராஜேஸ்வரியிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் போலீசார் ராஜேஸ்வரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘மகன் சிவக்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து என்னையும், என் மருமகளையும் அடித்துச் சித்திரவதை செய்துவந்தான். இதனால் ஆத்திரமடைந்த நான், அவன் தலை மீது கல்லைப் போட்டுக் கொலை செய்தேன். காவல்துறையினர் கொலை செய்ததைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று கல் மீது சாணத்தை ஊற்றி ரத்தத்தை அழித்ததாக’ ராஜேஸ்வரி வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைதுசெய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர்.