
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது கீழ்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது அண்ணாமலை. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் 35 வயது அலெக்ஸ் பாண்டியன் கட்டட மேஸ்திரியாக வேலை செய்துவருகிறார். இவருக்கும் இவரது தந்தை அண்ணாமலைக்கும் இடையே குடும்ப சொத்தைப் பங்கு பிரிப்பதில் தொடர்ந்து பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதில் அலெக்ஸ் பாண்டியன் தினசரி கட்டட மேஸ்திரி வேலைக்கு போய்விட்டு வரும்போது குடிபோதையில் வீட்டுக்கு வருவார். வந்ததும் தந்தை அண்ணாமலையை அவ்வப்போது சொத்தைப்பிரித்துக் கொடுக்குமாறு கூறி தந்தையை அடித்து உதைத்து தகராறு செய்துவந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்றும் (01.08.2021) வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அலெக்ஸ் பாண்டியன் சொத்துப் பங்கைக் கேட்டு தந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன்பின் போதை அதிகமானதும் வீட்டுக்குள் சென்று நன்றாக படுத்து தூங்கியுள்ளார். தன்னை அடிக்கடி மகன் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதைத் தாங்கமுடியாத அண்ணாமலைக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இன்றைக்கு ஒன்றில் இரண்டு பார்த்துவிடுவது என உறங்கிக்கொண்டிருந்த மகனை, உருட்டுக்கட்டை எடுத்துச்சென்று மகனின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார் அண்ணாமலை. இதில் ரத்தவெள்ளத்தில் அலெக்ஸ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், ரிஷிவந்தியம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த அலெக்ஸ் பாண்டியன் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீசார், பெரியவர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். குடும்ப சொத்து தகராறு காரணமாக, பெற்ற மகனின் அடிஉதை தாங்க முடியாது தந்தையே மகனை துணிந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் ரிஷிவந்தியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us