land dispute son in law who hacked passed away

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள நூறோலை என்ற ஊரின் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் கிரகோரி(58). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன்(33) என்பவருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கிரகோரி அவரது மனைவி ப்ளோரா ஆகிய இருவரும் விவேகானந்தனின்நிலத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விவேகானந்தன், கிரகோரி மற்றும்ப்ளோராவிடம் “எனது நிலத்தில் எப்படி ஆடு மேய்க்கலாம். உங்களுக்கும் எனக்கும் விரோதம் உள்ள நிலையில் என் நிலத்தில் அடியெடுத்து வைக்கலாமா” என்று அருவருப்பான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

Advertisment

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே கிரகோரி, செல்போன் மூலம் தனது மருமகன் ஆல்பர்ட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார். மாமியார், மாமனார் இருவரையும் திட்டிய விவேகானந்தன் மீது கோபம் கொண்ட ஆல்பர்ட் நேற்று விவேகானந்தன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விவேகானந்தன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆல்பர்ட் தலையில் வெட்டி உள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்ட்டை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஆல்பர்ட் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் விவேகானந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆல்பர்ட் தாக்கியதில் காயமடைந்த விவேகானந்தன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கைது செய்து விசாரணை செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.