Skip to main content

இன்சூரன்ஸ் பணத்தில் பங்கில்லையா? - தாயை கார் ஏற்றிக் கொன்ற மகன்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Son incident passed away mother by car tenkasi

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கர நாராயணன். இவரது மனைவி முருகம்மாள். இந்த தம்பதியருக்கு மோகன், ராம்குமார், உதயமூர்த்தி என மூன்று மகன்கள். இவர்களில் மோகன், ராம்குமாருக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். உதயமூர்த்திக்கு திருமணமாகவில்லை. கடந்த 10 ஆண்டுகட்கு முன்பு சங்கர நாராயணன் விபத்தில் பலியானார். எனவே முருகம்மாள் உதயமூர்த்தியுடன் வசித்து வருகிறார்.

 

சங்கர நாராயணன் விபத்து வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் ஆஜராகும் பொருட்டு நேற்று காலை 6.30 மணிவாக்கில் முருகம்மாள் மகன் உதயமூர்த்தியுடன் பைக்கில் நெல்லைக்குச் சென்று கொண்டிருந்தபோது சிவராமபேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையருகே பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். படுகாயமடைந்த உதயமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

தகவலறிந்த இலத்தூர் காவல் நிலைய போலீசார் முருகம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவர்களின் பைக் மீது மோதியது யார் என்று முதற்கட்ட விசாரணை நடத்தியபோது, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் நடந்ததை போலீசாரிடம் தெரிவித்திருக்கிறாராம். முருகம்மாளும் உதயமூர்த்தியும் சென்ற பைக் விபத்தில் சிக்கவில்லை. திட்டமிட்ட விபத்து என்று தெரிய வரவே போலீசார் முருகம்மாளை கொலை செய்யும் நோக்கில் காரைக் கொண்டு மோதியது யார் என்ற விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

 

முருகம்மாளுக்கும் அவரது மூத்த மகன் மோகனுக்குமிடையே சொத்துப் பிரச்சினை செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சங்கர நாராயணனின் 2 வீடுகளில் ஒரு வீட்டின் மீது வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளதாம். நீண்ட காலமாக கடன் திரும்ப செலுத்தப்படாததால் வங்கித் தரப்பு வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது, மோகன் அச்சன்புதூரைச் சேர்ந்த ஒருவரிடம் 5 லட்சம் கடன் வாங்கி வீட்டு லோனை அடைத்தவர் அந்தப் பணத்தை தாயிடம் கேட்டு வந்திருக்கிறார்.

 

இந்நிலையல் தந்தை சங்கர நாராயணனின் விபத்து நஷ்டஈடு தொகை வந்தால் அதனை தன்னிடம் தந்து விட வேண்டும் என்று மோகன் தாயிடம் பிரச்சனை செய்திருக்கிறார். முடியாது என தாய் மறுக்க ஆத்திரமான மோகன் நேற்றைய தினம் உதயமூர்த்தியும் முருகம்மாளும் சென்ற பைக்கை பின் தொடர்ந்து சென்று பைக் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான மூத்த மகன் மோகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சொத்திற்காக மகனே பெற்ற தாயை கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் மாவட்டத்தைப் பதைபதைக்க வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

அடுத்தடுத்து நடந்த சம்பவம்; சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த கார்கள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ad

அரியலூர் அருகே உள்ள செட்டி திருக்கோணம்  கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவி செல்வம்பாள். இருவரும் பிரிங்கியம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கருங்காலி கொட்டாய் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராமசாமி  திடீரென சாலையில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராமசாமி மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரை நெய்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்து காரின் பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் விபத்து நடந்த காரின் மீது மோதாமல் இருக்க, தனது காரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருக்க, அவர் கார் மீது ஜெயக்குமார் கார் மோதியுள்ளது. எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. இதனால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக இறங்கி உயிர்தப்பியுள்ளனர்.

இரு கார்களும் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த கார்களின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இதனால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் தப்பிக்க முயன்ற போது, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.