Skip to main content

தாயை இழந்த சோகத்தில் தூக்கிட்டுக் கொண்ட மகன்

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

The son hanged himself in grief of losing his mother

 

கோவையில் தாயை இழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவியின் பெயர் மல்லிகா. இத்தம்பதிக்கு பென்னிஸ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தாய் மல்லிகா கடந்த ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

 

பென்னிஸ் குமார் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார்.  இவர் கல்லூரியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தனது தாயை இழந்துள்ளார். தாயினை இழந்த சோகத்தில் மனஉளைச்சலில் இருந்த பென்னிஸ் குமார், வெளியுலகத் தொடர்புகளை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.

 

இந்நிலையில், நேற்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி விடுதியிலேயே இருந்துள்ளார். வகுப்புகள் முடிந்து நண்பர்கள் வந்து பார்த்த பொழுது பென்னிஸ் குமாரின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது பென்னிஸ் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்த நண்பர்கள், கதவை உடைத்து பென்னிஸ் குமாரை மீட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பென்னிஸ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  

 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். காவல்துறையின் விசாரணையில், கடந்த ஓராண்டாகவே பென்னிஸ் யாருடனும் சரியாக பேசாமல் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும், பென்னிஸ்குமார் எழுதி வைத்த கடிதத்தை காவல்துறையினர் அவரது அறையிலிருந்து கைப்பற்றினர். அதில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. என் வீட்டில் வைத்து உயிரிழக்க விருப்பமில்லை என்பதால், இங்கு தற்கொலை செய்து கொள்கிறேன். என் உயிரிழப்புக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’’ என எழுதப்பட்டிருந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

 

இதற்கு முன்னரே பென்னிஸ்குமார் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததும், பின்னர் குடும்பத்தினர் அவரை மீட்டு மனநல சிகிச்சை அளித்து படிக்க அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், கல்லூரி விடுதியில் மாணவர் மீண்டும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மத்தியிலும் உறவினர்களும் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
PM Modi's 'Road Show' in Coimbatore today

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வரவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5:30 மணிக்கு கோவை வருகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி, கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.