Skip to main content

விவசாயி படுகொலை; 17 வயது மகனை வைத்து தந்தை போட்ட திட்டம்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

son and father arrested farmer passed away case

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம். இவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவியின் மகன் ராமமூர்த்தி(60). மூன்றாவது மனைவியின் மகன் மகேந்திரன். இருவரும் அதே கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.  அண்ணன், தம்பி இருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி சாதகமாக தீர்ப்பு வழங்கிய நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி மகேந்திரன் மற்றும் அவரது அடியாட்கள் ராமமூர்த்தி விவசாய நிலத்தில் டிராக்டரை இறக்கி விவசாயம் செய்வதாக வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தியை பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராமமூர்த்தி மூன்று முறை ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

 

இந்நிலையில், நேற்று(12.12.2022) காலை விவசாயி ராமமூர்த்தி தனது நிலத்திற்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது விவசாயி மகேந்திரன் மற்றும் 17 வயதுடைய அவரது மகன் ஆகியோர் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியதாகக்  கூறப்படுகிறது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் உடலைக் கைப்பற்ற முயன்ற போது ராமமூர்த்தி உறவினர்கள் உடலைக் கைப்பற்ற விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சுமார் 3 மணி நேரம் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ராமமூர்த்தி உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகேந்திரனின் மகன் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது அப்பா மகேந்திரனையும் கைது செய்தனர். 

 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக ஆலங்காயம் ஒன்றிய குழுத் தலைவர் சங்கீதா கணவரும் ஆளுங்கட்சி பிரமுகருமான பாரி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சியினரை அதிரவைத்துள்ளது. இந்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்