
திறந்தநிலை பல்கலைக்கழக எம்.ஏ முதலாம் ஆண்டு பாடத் திட்டத்தில் கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், '' 'மதங்களுக்கு எதிரான திமுக, பொதுவுடமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அவை அவர்களை தேசிய பாதையில் கலந்து விடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி வன்முறை வெடிக்கும் போது அதை கண்டிக்காமல் இருக்கின்றனர்' இப்படி அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது பொலிட்டிகல் சயின்ஸ் புக்கில் வர வேண்டிய விஷயமா? இது சமீபமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாடத்திட்டங்களை எல்லாம் திருத்தி அமைத்து எழுதுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
Follow Us