Skip to main content

“இதுவரையில் யாரும் செய்திராத ஒன்று..” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

MRK

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்தும், திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. 

 

இதன்பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்ட நெல் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாயும், பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு 6032 ரூபாய்க்கான இடுபொருட்கள் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 6 மாதத்தில் இரண்டாவது தொகுப்பு இது. குறுவைக்கு ஏற்கனவே ஒரு தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு தொகுப்பு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரையில் யாரும் செய்திராத ஒன்று.

 

இந்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1,62,000 ஏக்கர் சம்பா பயிரிட்டதில் 4,875 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 33 சதவீதத்திற்கு மேல் 2845 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நெல் மட்டும் 2670 ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல டெல்டா பகுதிகளில் மொத்தம் 43,65,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருக்கும் நிலையில் 1,58,572 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி உள்ளது.  இதில் நெல் மட்டும் 1,39,412 ஏக்கர். 33 சதவீதத்திற்கு மேல் 1,43,862 ஏக்கர் பாதிப்படைந்துள்ளது. 

 

கடந்த ஆட்சிக் காலத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த மழை பாதிப்புக்கான நிவாரணம் ஜனவரி மாதத்தில் தேர்தலைக் கருத்திற்கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையிலேயே நிவாரணங்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உரத் தட்டுப்பாடு என்பது உலகளவில் பெரிய சவாலாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உரம் காரைக்கால் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அது மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் உரத்தட்டுப்பாடு ஏதுமில்லை கையிருப்பு சரியாக உள்ளது" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்