வாலிபரை கொன்று சடலம் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; காவல்துறை விசாரணை!

someome person passes away Pennagaram

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள மஞ்சநாயக்கனஅள்ளி நரசிபுரம் மயானம் பகுதியில், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அந்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர் சடலத்தைப் பார்த்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் மலருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து அவர் பெரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அதில் சடலமாகக் கிடந்தவருக்கு வயது 30 முதல் 35க்குள் இருக்கும் எனத் தெரிகிறது.

நெஞ்சு பகுதி முழுவதும் தீயில் கருகி இருந்ததால் அவர் வேறு எங்கோ கொலை செய்துவிட்டு, சடலத்தைக் கொண்டு வந்து அப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இறந்த நபரின் அடையாளத்தை மறைக்கும் நோக்கத்துடன் கொலையாளிகள் சடலத்தை எரிக்க முயன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் நாய், சம்பவ இடத்திலேயே சுற்றிச்சுற்றியே வந்தது. சடலமாகக் கிடந்த வாலிபரின் வலது கையில் ஆங்கிலத்தில் எஸ்பிஎம் என்று பச்சை குத்தப்பட்டும், இடது கையில் ஐந்து விரல்களிலும் நகக்கண் இல்லாமல் இருந்தது. வலது கையில் சிவப்பு நிறத்தில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. சடலத்தின் அருகில் 2 லிட்டர் அளவுள்ள குளிர்பான பாட்டில் ஒன்று மூடி இல்லாமல் கிடந்தது.

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பதையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி நாமக்கல் மாவட்டங்களில் அண்மையில் காணாமல் போன இளைஞர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து, அதன் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர்.

dharmapuri police
இதையும் படியுங்கள்
Subscribe