Skip to main content

இதுவும் ஒருவகையான சுரண்டல் தான்...- ராமதாஸ் அறிக்கை

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

ரயில் கட்டணங்கள் நேற்று (31.12.2019) நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

அதன்படி சாதாரண ரயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும், குளிர்சாதன வசதி வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு நான்கு பைசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டண உயர்வு நேற்று (31.12.2019) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

 

This is some kind of exploitation...-RAMADOSS


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

தொடர்வண்டி பயணிகள் கட்டணம் புத்தாண்டு முதல் கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை உயர்த்தப் பட்டுள்ளது. தொடர்வண்டிக் கட்டணம் கிலோமீட்டருக்கு 40 பைசா, அதாவது 77% வரை உயர்த்தப்படும்  என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்டண உயர்வு மிகவும் குறைவாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை.

இந்திய தொடர்வண்டி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சாதாரணத் தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதி இல்லாத வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு காசு, விரைவு வண்டிகளில் இதே வகுப்புகளுக்கு இரு காசு வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. விரைவுத் தொடர்வண்டிகளில் குளிரூட்டி வசதி கொண்ட வகுப்புகளுக்கு கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. 66 விழுக்காடு பயணிகள் பயன்படுத்தும் புறநகர் தொடர்வண்டிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் தொடர்வண்டியின் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். அதை மனதில் கொண்டு தான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை கட்டணம்  குறைக்கப்பட்டது.

 

This is some kind of exploitation...-RAMADOSS


எனினும், கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது; தொடர்வண்டித்துறையின் இயக்கச் செலவுகள் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களாலும், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு  ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் தொடர்வண்டிகளில் அதிகபட்ச கட்டண உயர்வு ரூ.10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதேநேரத்தில் தொடர்வண்டி கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்ற வினா எழுகிறது. தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் செய்து தரப் பட்டன. தொடர்வண்டி நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டதும் பா.ம.க அமைச்சர்கள் இருந்த காலத்தில் தான்.

ஆனால், இன்றைய நிலையில் தொடர்வண்டிகள் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது. தொடர்வண்டிப் பெட்டிகளில் எலிகள் ஓடும் அளவுக்கு தான் அவற்றின் பராமரிப்பு உள்ளது. கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பல நேரங்களில் பயணிகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது. அதேபோல் தொடர்வண்டி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை.  இக்குறைகள் அனைத்தையும் களைந்து தொடர்வண்டி பயணத்தை மகிழ்ச்சியானதாகவும், மலர்ச்சி ஆனதாகவும் மாற்றும் அளவுக்கு பயணிகளுக்கான வசதிகளை தொடர்வண்டித்துறை செய்து தர வேண்டும்.

இவைதவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை விமானக்கட்டணத்தை விட கூடுதலாக உயர்த்தும் முறை நியாயமற்றதாகும். இந்த முறையில், அண்மையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான கட்டணமாக ரூ.2440 வசூலிக்கப் பட்டுள்ளது. இது இயல்பான கட்டணத்தை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். இதுவும் ஒருவகையான சுரண்டல் தான் என்பதால், இம்முறையை முற்றிலுமாக கைவிட தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.