/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1002.jpg)
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக 16ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்பு திரை உலகை தாண்டி பல்வேறு தரப்பினரையும் மிகுந்தசோகத்தில் ஆழ்த்தியது.
நடிகர் விவேக், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தபோது அவருக்கு ஆசிரியராக வந்தவர் சாலமன் பாப்பையா. அவர் நடிகர் விவேக் இழப்பை குறித்தும் அவரது கல்லூரி காலத்தைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,"அமெரிக்கன் கல்லூரியில் விவேக் இளங்கலை வணிகவியல் படித்தபோது, பேச்சுக்கலை என்ற பாடத்தைநான் நடத்தினேன். கல்லூரி காலத்திலேயே நடிப்புத் திறமைமிக்கவராக இருந்தார். கல்லூரியில் படிக்கும் போதே பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். அவரைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். யாரையும் புண்படுத்த நினைக்கமாட்டார். என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். மதுரை வரும்போது எனது வீட்டிற்கு வருவார். அவருடன் 3 திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_230.jpg)
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது, முதல் தொலைப்பேசி அழைப்பு அவரிடம் இருந்து தான் வந்தது. திரைப்படங்களில் அவரது நகைச்சுவைகாட்சிகள் சிந்தனைத் தரமிக்கதாக இருக்கும். அவரது ஒவ்வொரு நகைச்சுவையிலும் ஒரு சிந்தனை இருக்கும். என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு நகைச்சுவையின் மூலம் சிந்திக்க வைக்கக்கூடிய சிந்தனையாளராகவும் இருந்தார். அதனால் அவரை 'சின்ன கலைவாணர்' என்று மக்கள் அங்கீகரித்தனர். அப்படிப்பட்ட என் மாணவனை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு. குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் வேண்டுகோளை ஏற்று, மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக நடத்தி வந்தார். தமிழகத்தைப் பசுமையாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். அவரது மறைவு திரைத் துறைக்கு மட்டுமன்றி தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)