Skip to main content

ராணுவ வீரரின் சதித்திட்டம் அம்பலம்; கைது நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை!  

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Soldier's Plot Revealed; The police launched an arrest operation!

 

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கீர்த்தி, ரேணுகாம்பாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று சிலர் அந்தக் கடையைக் காலி செய்யச் சொல்லி அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதோடு கீர்த்தியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் பிரபாகரன், தங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிக்குமாறு மண்டியிட்டு வீடியோ வெளியிட்டார். அதில், “அரை நிர்வாணமாக்கி என்னுடைய மனைவியை அடித்திருக்கிறார்கள் ஐயா. இது எந்த உலகத்தில் நியாயம் பாருங்க. ஐயா காப்பாத்துங்க ஐயா” என்று வெளியிட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

 

இதற்கு உடனடியாக பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா படவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மீது 120க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியிட்டிருக்கும் காணொளியைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” என்று தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி விசாரணை நடத்தி இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பப்படுகிறது என்றும் இராணுவ வீரருக்குத் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். 

 

Soldier's Plot Revealed; The police launched an arrest operation!

 

இந்நிலையில் அந்த ராணுவ வீரர் தன் நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவின் மூலம் மனைவியை அரைநிர்வாணமாக்கி அடித்ததாக அவர் சொன்னது பொய் என்பது தெரியவந்தது. 

 

மண்டியிட்டுக் கதறி அரசுக்கே விபூதி அடித்த ராணுவ வீரர்; ஆடியோவில் அம்பலமான உண்மை

 

இது தொடர்பாக திருவண்ணாமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன் அவரது மனைவி கீர்த்தி, உறவினர்கள் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து ராணுவ வீரருடன் தொலைப்பேசியில் பேசி சதித் திட்டம் தீட்டியதாக அவரது உறவினர் வினோத் என்பவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய நபரான ராணுவ வீரர் தனது குடும்பத்துடன் தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்