Solar company encroachment .. The whole village is fasting ..!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில், தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அருகே இருக்கும் நாகலாபுரம் மின்பகிர்மான நிலையத்திற்கு, உயரழுத்த சோலார் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அண்மையில் சின்னவநாயக்கன்பட்டி, சல்லிசெட்டிபட்டி, சங்கரலிங்கபுரம், நாகலாபுரம் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பங்கள் நடப்பட்டன.

Advertisment

இதற்காக நாகலாபுரத்தில் சாலையோரம் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. ஊராட்சியின் அனுமதியின்றி தனியார் சோலார் நிறுவனம் இந்த அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். சாலையோரம் மின் கம்பங்களை நடுவதை தவிர்த்து, மாற்று வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பங்களை நட வேண்டும் என ஏற்கனவே புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சியினர் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் பாதுகாப்புடன் மரங்கள் வெட்டப்பட்டு, மின்கம்பங்கள் நடப்பட்டன. மின்கம்பங்கள் நட்ட அதே நாளில் பெய்த லேசான மழைக்கே தாக்குப்பிடிக்காமல் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இந்த சூழலில் உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லும்போது, அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் கவலை அடைகின்றனர்.

Advertisment

Solar company encroachment .. The whole village is fasting ..!

மாற்றுப் பாதையில் மின்கம்பங்களை நடக்கோரியும், மரங்களை வெட்டிய சோலார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாகலாபுரத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் உலகம்மாள் முனியசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாகலாபுரத்தில் இன்று வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்திருந்தனர்.

படங்கள்: விவேக்