Skip to main content

"ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கிச்சுமந்து வருகிறார் என்றால்..." - கலைஞரின் கூற்றை குறிப்பிட்ட முதல்வர்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

'This is social justice where the goat is unable to walk' - the Chief Minister mentioned the kalaingar's speech

 

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளால் படைக்கப்பட்ட கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்களை பார்வையிட்டார். அதன் பிறகு விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  “பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், விபத்தின் காரணமாக ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்களை சிறப்பு கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும்.

 

அவர்கள் உடல் குறைபாடானது. ஆனால், உள்ளக்குறைபாடு அல்ல; அறிவு குறைபாடு அல்ல; திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை மதிக்க வேண்டும். இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்பு கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்துவிட்டு தான் வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் திறமையால் உருவாகி இருக்கக்கூடிய பொருட்களை அங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையோடு நடத்திட வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சமூகத்தில் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் கால் நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை என்று கருதி நாம் உருவாக்கிய அந்தப் பாதை தான் அன்பு பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்த போது மாற்றுத்திறனாளிகள் மன மகிழ்ச்சியால் திளைத்ததை நானும் பார்த்துத் திளைத்தேன். அது மிகப்பெரிய செலவு பிடிக்கும் திட்டமல்ல. ஆனால், அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

 

பிறந்ததிலிருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித் குமார் அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாக நாம் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகள் எல்லாம் சாட்சியாக அமைந்திருக்கிறது. உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்பொழுது பெற்று வரும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1 ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்.

 

ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கிச் சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூக நீதி என்று எளிமையான விளக்கத்தைச் சொன்னவர் நமது கலைஞர். அத்தகைய சமூக நீதி சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.