Advertisment

தூத்துக்குடி சம்பவத்தில் சமூக விரோதிகள் ஈடுபடவில்லை! - மேதாபட்கர்  உறுதி

mp

தேசிய சமூகவியல் செயல்பாட்டாளரும் பசுமை போராளியுமான மேதாபட்கர் இன்று டெல்லியில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று நடந்தவைகளை பார்வையிட்டார். அவருடன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சிவஞான சம்மந்தம் மற்றும் சிலரும் உடன் வந்திருந்தனர்.

Advertisment

அரசு மருத்துவமனையில் போலீஸ் தடியடியாலும், துப்பாக்கி சூட்டாலும் காயம் பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், கை மற்றும் கால் அடிப்பட்டு எலும்பு முறிவு சிகிச்சை வார்டில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களில் பரமசிவன் என்பவரிடம் நடந்தவைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், நான் ஆட்டோ ஓட்டும் டிரைவர். ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் மடத்தூர் அருகில்தான் நாங்கள் குடியிருந்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அதனால்தான் பேரணியில் நான் சென்றிருந்தேன்.

Advertisment

கலெக்டர் அலுவலகம் சென்றபோது கூட்டமாக சிதறி ஓடினார்கள். சுடுறாங்க... சுடுறாங்க... என்று பீதியில் அலறிக்கொண்டு ஓடினார்கள். நானும் பயந்து திரும்பி ஓடினேன். எனது வலது தொடையில் குண்டு பாய்ந்து துளைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டது. இன்னமும் காயம் ஆரவில்லை. நடக்கவும் முடியவில்லை. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நான் ரத்த காயத்துடன் இருந்தபோதும் என்னை அடித்தார்கள். ஆங்கிலத்திலும், இந்தியிலுமாய் அந்த டிரைவர் சொன்னதை மேதாபட்கர் வாக்குமூலமாக எழுதிக்கொண்டார்.

தேவர் காலனியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணான தங்கம் போலீஸ் அடித்ததில் இடது கை எலும்பு உடைப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணும் அடிப்பட்டு சிகிச்சையில் இருப்பதை கண்டு அதிர்ந்த மேதாபட்கர், அவரிடம் நடந்தவைகளை கேட்டார். அந்த பெண்ணோ, தேவர் காலனியில் நாங்கள் குடியிருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையால் எங்கள் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலக்கு கேன்சர், சிலக்கு கர்ப்ப நோய் வருகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடக்கும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று எங்கள் பகுதி மக்களும் சொன்னார்கள்.

நாங்களும் ஊர்வலத்தில் சென்றோம். ஊர்வலம் புறப்பட்டு பாதி தூரம் சென்றிருப்போம். அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் கலவரமானது. பெண்களாகிய நாங்கள் பின்வாங்கி ஓடிவந்தோம். அப்போது போலீசார், எங்களை அடித்ததும் கை எலும்பு உடைந்தது. பொம்பளைங்கன்னு கூட பார்க்கலம்மா என்று கண்ணீரோடு தங்கம் சொன்னதை மேதாபட்கரும், உடன் வந்தவர்களும் எழுதிக்கொண்டனர்,.

இதையடுத்து வெளியே வந்த மேதாபட்கர், இந்த போராட்டத்தில் அப்பாவி மக்கள்தான் தாக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுள்ளார்கள். சமூக விரோதிகள் இதில் ஈடுபடவில்லை. தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிய மக்களை காவல்துறை தாக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. இதில் முழுக்க முழுக்க குற்றவாளி அனில் அகர்வால்தான். மத்திய மாநில அரசுகள் சட்ட ரீதியான முறையை பின்பற்றவில்லை.

இந்த ஆலை மகாராஷ்டிராவின் ரத்தின கிரியிலும், ஒரிசாவில் பூரியிலும் செயல்படவிடாமல் தடுத்து விரட்டப்பட்டது. அப்படிப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதித்தது முரணானது. பொலிவுசன் கண்ரோல் போர்டு என்பது பொலிவுசன் கண்ரோல் போர்டு அல்ல. அது பொலிட்டிக்கல் கண்ரோல் போர்டு ஆகிவிட்டது.

மாநில அரசின் விசாரணை கமிசன் அறிக்கைகள் வெளிவரப்போவதில்லை. எத்தனையோ இதுபோன்ற கமிசன்கள் அறிக்கைகள் வெளிவராமல் முடக்கப்பட்டுள்ளன. எனவே தேசிய அளவிலான மனித உரிமை கமிசன் இதனை விசாரணை செய்ய வேண்டும். மேலும், இந்த போராட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்று அழுத்தமாக சொன்னார்.

metha patkar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe