publive-image

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.11.2023) தனது முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அச்சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துமாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

Advertisment

இந்த மாணவர்கள் குழுவில் பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் சானிடோரியம் - செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அரசு அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனம் ஆகிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் தலைசிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், கா. ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

publive-image

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன. மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ இரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்” என்று குறிப்பிட்டு அதற்கான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.