ADVERTISEMENT

''இதுவரை 124 புகார்கள் குவிந்துள்ளது...''-  'ஆப்ரேஷன் கந்துவட்டி' குறித்து தமிழக டிஜிபி தகவல்!

06:51 PM Jun 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு கடந்த 8 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். மேலும், 'ஆப்ரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரைப் பெற்று வழக்குகளை பதியுமாறு மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எழுதியிருந்த கடிதத்தில், "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆப்ரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பல மாவட்டங்களில் கந்துவட்டியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 124 கந்துவட்டி /மீட்டர் வட்டி தொடர்பான புகார்கள் குவிந்துள்ளதாக தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த 124 புகார்களில் 89 புகார் மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக நீலகிரியில் 7 வழக்குகளும், நாமக்கல், சேலத்தில் தலா 6 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரிடம் இருந்து 40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 22 பேரிடம் இருந்து பூர்த்தி செய்யப்படாத ஆவணங்கள், படிவங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT