Skip to main content

உணவக உரிமையாளர் கொலை வழக்கு; குற்றவாளியை கண்டுபிடித்த மோப்ப நாய்

 

Sniffer dog nabs accused in dhaba restaurant owner case

 

சேலம் அருகே தாபா உணவக உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளியை, காவல்துறை மோப்ப நாய் மேகா கவ்விப்பிடித்து காவல்துறை வலையில் சிக்க வைத்த சம்பவம் பலருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.  

 

சேலம் மாவட்டம் அரியானூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). அதே பகுதியில் புதிதாக தாபா உணவகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், நவ. 24ம் தேதி அதிகாலை அந்தக் கடையின் உள்ளே கந்தசாமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

 

தகவல் அறிந்த சேலம் புறநகர் டிஎஸ்பி தையல்நாயகி, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் (24) என்ற இளைஞர் இந்த உணவகத்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். அவர்தான் கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது.  

 

தாபா கடையில் தற்போது மேற்கூரை, உள் அலங்காரம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் ஜோசப்பும் ஈடுபட்டு இருந்தார். சம்பவத்தன்று இரவு கந்தசாமியும், ஜோசப்பும் கடையிலேயே படுத்துக்கொண்டனர். அப்போதுதான் இந்தக் கொலை நடந்துள்ளது. கந்தசாமியைக் கொன்றபோது ஜோசப்பின் சட்டைத்துணியில் ரத்தம் தெறித்துள்ளது. இதனால் அவர் ரத்தக்கறை படிந்த சட்டையைக் கழற்றி தண்ணீரில் அலசி, அங்கிருந்த கொடி கயிற்றில் உலரப் போட்டுவிட்டு, வேறு சட்டை அணிந்து கொண்டு தப்பி ஓடியிருப்பது தெரியவந்தது.  

 

தனிப்படை காவல்துறையினர் கொலையாளியை ஒருபுறம் தேடி வந்த நிலையில், மற்றொருபுறம் காவல்துறை மோப்ப நாய் மேகாவையும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர். கொடி கயிற்றில் உலர்ந்து கொண்டிருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை நாய் மேகாவிடம் காட்டி அதன் பயிற்சியாளர்கள் மோப்பம் பிடிக்கச் செய்தனர். அதையடுத்து மேகா கொலையாளி சென்ற திசையை நோக்கி ஓடியது.  கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள அரியானூர் பேருந்து நிறுத்தம் பகுதிக்குச் சென்று நின்றது. 1008 லிங்கங்கள் உள்ள கோயில் பகுதிக்கு ஓடிச்சென்ற மோப்ப நாய் மேகா, அங்கிருந்த புதருக்குள் ஆவேசமாகப் பாய்ந்தது.  

 

அந்த நாயை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர், புதர் மறைவில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அந்த நபர்தான் கந்தசாமி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜோசப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். கைச்செலவுக்கு பணம் இல்லாததால், தாபா உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மோட்டாரை திருடிச்சென்று, அதை விற்றுவிட்டு சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றிடலாம் என்று இருந்தேன். மோட்டாரை திருடும்போது கந்தசாமி பார்த்துவிட்டார். அவர் சத்தம் போட்டதால், ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  

 

கைதான அவரை காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜோசப்பை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  கொலையாளியை பிடிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த மோப்ப நாய் மேகாவையும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். அதற்கு பயிற்சி அளித்த காவல்துறை பயிற்சியாளர் எஸ்.ஐ. சக்திவேல் மற்றும் காவலர்களையும், குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல்துறையினரையும் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.  

 

திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களின் போது, வழக்கமாக காவல்துறை மோப்ப நாய் குற்றவாளிகளைத் தேடி ஓடிச்சென்று ஓரிடத்தில் நின்று கொள்ளும். மோப்ப நாய் மூலம் குற்றவாளிகள் பிடிபடும் சம்பவம் என்பது அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.  

 

இந்நிலையில், தாபா உரிமையாளர் கொலை வழக்கில் 1 கி.மீ. தூரம் ஓடிச்சென்று கொலையாளியை கவ்விப் பிடித்த மோப்ப நாய் மேகாவின் நுண்ணுணர்வு மிக்க பணி சேலம் மாவட்டக் காவல்துறையினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !